ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் ராதாரவி.
'மண்டபம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார்.
விழாவில், ராதாரவி பேசியதாவது:
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை தரவேண்டும். இந்தி படங்கள் வருகிறது என்று, தமிழ் படம் திரையிடுவதை தவிர்க்கக் கூடாது.
தமிழ் படங்களை திரையிடாத தியேட்டர்களை இழுத்து மூடவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மனமில்லாவிட்டால் அவற்றை குடோன்களாக ஆக்கிவிடுங்கள். வேறு எங்காவது போய் தியேட்டர் கட்டிக் கொள்ளுங்கள்.
சின்ன படங்களை திரையிடுவதற்கு பல தியேட்டர்கள் முன் வருவதில்லை. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில சட்ட திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
தமிழ் பெயர்கள்
சில நடிகர்-நடிகைகள், அம்மா, அப்பா சூட்டிய பெயர்களை மாற்றிவிட்டு, 'நியூமராலஜி'படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தாய், தந்தையைவிட 'நியூமராலஜி' எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. இது 'சோளி உருட்டுவதை நம்பி அரசியல் நடத்துவது' போல் உள்ளது.
இப்போதெல்லாம் சில இசை அமைப்பாளர்கள் 'டியூன்' போடுவதற்காக வெளிநாடுகளுக்கு போகிறார்கள். கூடுவாஞ்சேரியிலும், மதுரையிலும் கிடைக்காத 'டியூன்'களா வெளிநாடுகளில் கிடைக்கப் போகிறது. இதுபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் சினிமாவை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு கண்டனம்
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்துதான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் 'ஸ்லம்டாக் மில்லினர்' அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பட உலகை அடியோடு புறக்கணிக்கிறார்.
அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார்.
இத்தனையையும் தாண்டி தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் கண்டுகொள்வதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றார்.
0 comments:
Post a Comment